ஒரு நாள் திருடன் ஒருவன் ஒரு வீட்டில் புகுந்தான்! அங்கு கிடைத்த தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடிக்கொண்டு ஓடினான்! வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் திருடனைக் கவனித்து விட்டது! அது பலமாகக் குரைக்க ஆரம்பித்துவிட்டது! அதைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்துக் கொண்டார்கள். திருடன் ஓடுவதைக் கவனித்த அவர்கள் அவனைத் துரத்தினார்கள். திருடன் ஊரைத் தாண்டி ஓடினான்! விடாமல் துரத்தினார்கள்! திருடனுக்குத் தான் பிடிபட்டு விடுவோமோ என்று பயம் வந்து விட்டது! மரத்தடியில் படுத்திருந்த பெரியவரிடம் சங்கிலியைப் போட்டு விட்டு காட்டுக்குள் ஓடி விட்டான்!
அப்போது திருடனைத் துரத்தி வந்தவர்கள் அங்கு வந்தார்கள்.
""ஏய் திருடா!... சங்கிலியைக் கொடு!....'' என்றார்கள்.
""நீங்கள் துரத்தி வந்த திருடன் நானில்லை!...'' என்றார் பெரியவர்.
""கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறாய்!.... இதில் பொய் வேறா?''
பெரியவர் அவர்களிடம், ""இதை நான் திருடவில்லை!...'' என்றார்.
ஆனால் துரத்தி வந்தவர்கள் அதை நம்பவில்லை.
""திருடிய சங்கிலியை கையில் வைத்துக் கொண்டு, பொய் வேறு சொல்கிறாயா?.... ம்.... வா!.... இப்போதே உன்னை காவலர்களிடம் ஒப்படைக்கிறோம்!...'' என்று கோபமாகப் பேசினார்கள்.
பெரியவர் சிரித்துக் கொண்டே, தனது கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கினார்!.... முழங்காலுக்குக் கீழே அவருக்கு இரண்டு கால்களும் இல்லை!.... ""இப்பொழுது நம்புகிறீர்களா?...'' என்றார்.
துரத்தி வந்தவர்கள் தலைகுனிந்தனர். பெரியவர் நடந்ததைக் கூறினார். அவசரப்பட்டுத் தவறான முடிவுக்கு வந்ததற்காக துரத்தி வந்தவர்கள் பெரியவரிடம் மன்னிப்புக் கோரினர்!
0 Comments:
Post a Comment