TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு


தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. 
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
அரசு கேபிளில் 200-ஆவது சேனல்: இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும். நீட் உட்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200-ஆவது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் தொடங்கியது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு செய்யப்படும். இதை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்க இருக்கிறார். இதுதவிர மாநிலம் முழுவதுள்ள 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர். 
பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஆய்வு: கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புத் தளம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.


Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment