அங்கன்வாடி மையத்தில் தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தடை கோரிய வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வந்த போது, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவது மாநில அரசுகளின் கடமையாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மையங்களால் கல்வி அறிவு சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், குழந்தைகள் மத்தியில் சத்து குறைபாடு குறைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக அரசு ஏற்கெனவே கொள்கை முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அரசிடம் அதிகளவு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வருவது தற்போது பேஷனாகிவிட்டதாக விமர்சித்த நீதிபதிகள், குழந்தைகளின் நலனுக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது எனக் கூறினர்.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக அரசின் முடிவை பாராட்டியே ஆக வேண்டும் எனக் கூறி, இந்த அரசாணைக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
0 Comments:
Post a Comment