ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள சூழலில் அதனை எப்படி சமாளிப்பது என பள்ளி நிர்வாகங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.
கோடை விடுமுறைக்குப் பின் வரும் ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கின்றன. இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் தண்ணீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரை முழு அளவில் விநியோகம் செய்ய, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், மாணவர்களின் தேவைகளுக்கு தண்ணீர் வசதி செய்து தருவது உண்மையிலேயே பெரும் சவாலான விஷயம் தான் என பள்ளி நிர்வாகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. பாதுகாப்பற்ற குடிநீரால் மாணவர்களுக்கு சிறுநீரக தொற்று, காலரா, வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பள்ளிகள் அச்சம் தெரிவித்துள்ளன
இம்முறை கோடை பாரபட்சமின்றி வாட்டி வதைக்கும் சூழலில், பெற்றோர்கள் பள்ளி திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் உடல்நலன் பாதிக்கும் சூழல் உள்ளதால், கோடை காலம் முடிந்தவுடன் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அல்லது படிமுறை அடிப்படையில் பள்ளிகளை நடத்தலாம் என்றும் பள்ளி நிர்வாகங்களும் யோசனை தெரிவித்துள்ளன. குறிப்பாக தண்ணீர் பஞ்சம் தாண்டவமாடும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதால் போர்வெல் மூலம் நீர் தொடர்ந்து கிடைக்குமா என பள்ளி நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். சில பள்ளி நிர்வாகங்கள் அருகிலுள்ள விளைநிலங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து, மாணவர்களின் பயன்பாடுகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளன. மெட்ரோ மற்றும் தண்ணீர் லாரிகளை நாடினாலும் தேவையான முழு நீரும் கிடைக்கால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பள்ளிகள் குறிப்பிட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் பள்ளிகளில் சுற்றுச்சுவர், மின் இணைப்புகள் மற்றும் இணைய வசதி, மாணவர்கள் பயன்படுத்தும் மேஜைகள், ஆசிரியர்களின் நாற்காலிகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை செப்பனிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source: oneindia.com
0 Comments:
Post a Comment