தமிழகம் முழுவதும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே அனைத்து விலையில்லா பாட நூல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்கு முன்னரே விடுமுறை வழங்கப்பட்டது. குறிப்பாக இந்த ஆண்டு வெயில் தாக்கம் காரணமாகவும், நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும் 50 நாட்களுக்கு மேலாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் சந்தேகம் நிலவி வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளி தொடங்கும் தேதியே, அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள், இலவச சீருடைகள் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பைகள் ஆகியவற்றை இலவசமாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு 9,10,11,12 வகுப்புகளுக்கான சீருடைகள் மாற்றியமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிக்குள் பள்ளி வளாகங்கள் முழுவதும் வண்ண பூச்சுகள் அடிக்கப்பட்டு, பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வசதி ஆகியவற்றை செய்திருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்
0 Comments:
Post a Comment