TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்து கல்வித்துறையை ஒருங்கிணைக்கும் 'இஎம்ஐஎஸ்' இணையதளம்: ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வித் துறை ஒரே நெட்வொர்க்கில் கொண்டுவர உருவாக்கப்பட்ட 'இஎம்ஐஎஸ்' என்ற நிர்வாக இணையதளத்தில் ஜூனில் இருந்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் சுருக்கமாக 'இஎம்ஐஎஸ்' (Education Management Information System) என அழைக்கப்படும் 'கல்வியியல் மேலாண்மை தகவல் மையம்' என்ற இணையதளம், கல்வித்துறையின் ஒட்டுமொத்த நிர்வாகஇணையதளமாக உருவெடுக்கிறது. கல்வித்துறையின் அனைத்து தகவல்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்து, நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதற்காக சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இஎம்ஐஎஸ் நிர்வாக இணையதளம் உருவாக்கப்பட்டது.


ஆனால், பரந்துவிரிந்த ஒரு துறையை ஒரே இணையதளத்தில் கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல என்பதால், இவ்வளவுஆண்டுகளாக அந்த பணி நீண்டுகொண்டே இருந்தது. இப்போது, தமிழக கல்வித்துறையின் ஒட்டுமொத்த தகவல்களையும் இஎம்ஐஎஸ் நிர்வாக இணையதளத்துக்குள் கொண்டுவரும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து, ஜூன் 1-ம் தேதி முதல் இனி அனைத்து நிர்வாக பணிகளையும் இஎம்ஐஎஸ் மூலமாக செய்திடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:இஎம்ஐஎஸ் இணையதளமானது, தலைமை ஆசிரியர்கள் தொடங்கி வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைகல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர் என நிர்வாகத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமேஅணுகக்கூடிய நிர்வாக இணையதளமாகும். ஒவ்வொரு அதிகாரியும் அவரவர் எல்லைக்கு உட்பட்ட விவரங்களை இணையதளத்தில் பராமரிக்க வேண்டும். சுருக்கமாக, வங்கி செயல்பாடுகள் ஒருங்கிணைந்த இணையதளத்தில் நிர்வகிக்கப்படுவது போன்றது.
இதில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 3 பெரும் பிரிவுகளைக் கொண்டிருக்கும். பள்ளிகள் என்ற பிரிவில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அவை பூகோள ரீதியாக அமைந்துள்ள இடம், மாணவர்களின் எண்ணிக்கை, பாடப்பிரிவு விவரங்கள், பள்ளியில் உள்ள ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள், கழிப்பிட விவரங்கள் என அனைத்தும் அடங்கியிருக்கும். தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரமும் அதில் அடங்கும்.
மாணவர்கள் என்ற பிரிவில் மாணவர்களின் புகைப்படம், பெயர், முகவரி, ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ஜாதி, மதம் என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆசிரியர்கள் பிரிவும் இதேபோல, ஆசிரியரின் முழு விவரம், அவரது கல்வித் தகுதி, பணி நிலை, பணிக்காலம் என அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும். இப்படி, பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து விவரங்களும் ஒற்றை தளத்தில் கொண்டு வரப்பட்டிருப்பதால், இனி நிர்வாகப் பணிகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்கும்.
உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் ஏற்கெனவே இணையதள வசதி உள்ளது. மற்ற பள்ளிகளிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி, பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் அன்றாட தகவல்களையும் இஎம்ஐஎஸ்-ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்கான பயிற்சி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி, மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றை வழங்குவது, மாற்றுச் சான்றிதழ் (டி.சி)வழங்குவது, கல்வி உதவித்தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது உள்ளிட்ட அனைத்தும் உடனுக்குடன் செயல்படுத்தப்படும். இதில் விடுபட்டு போனவர்களை எளிதில் கண்டறிய முடியும்.
தனியார் பள்ளிகளுக்கும்..
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், பள்ளிகளின் விவரங்களை ஆய்வு செய்தல் ஆகியவையும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள விவரங்களைக் கொண்டே வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு இனி இடமாறுதல் கவுன்சலிங், இஎம்ஐஎஸ்- இணையதளத்தின் மூலமாக நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்ட, வழங்கப்பட வேண்டிய அரசு சலுகைகள் என அனைத்தையும் எளிதில் அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
வரப்போகும் இட மாறுதல் கவுன்சலிங், இஎம்ஐஎஸ் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கும் இதன் மூலமாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இனி,கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் எந்தப் பணியும் தாமதமின்றி நடைபெறும். தாமதப்படுத்தப்படும் பணிகளை எளிதில் அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் முடியும். இனி, இஎம்ஐஎஸ்இணையதளம்தான் கல்வித்துறையை, ஒருங்கிணைத்து, நிர்வகிக்கப்போகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment