TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

குழந்தைகளைக் கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் பெற்றோரா நீங்கள்? இந்தப் பாடம் உங்களுக்குத் தான்!

அடிப்படையில் குழந்தை வளர்ப்பில் மூன்று வகைகள் உண்டு.

சில பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு என்பது ஆற்று நீரோட்டம் போன்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி குழந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதியாக அதன் பாட்டில் நழுவிச் சென்று கொண்டிருக்கும். அவர்களது வாழ்வில் குழந்தைகள் பிறப்பார்கள், வளர்வார்கள், படிப்பார்கள், வாழ்வார்கள். அதாவது இவ்வுலகில் கோடானுகோடி யுகங்களாக மனிதர்கள் எப்படிப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து காணாமல் போகிறார்களோ? அப்படியே தான் அவர்களது வாழ்வும் அமைதியாக நடந்தேறும்.

இன்னும் சில பெற்றோர் இருக்கிறார்கள். சர்வாதிகாரிகள் போலத்தான் நடந்து கொள்வார்கள்.

அத்தகைய பெற்றோர் இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கு முடிவெடுக்கும் உரிமைகள் கிடையாது. அவர்களது அத்தனை முடிவுகளும் பெற்றோர்களால் மட்டுமே எடுக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் சேராமல் இன்னொரு கேட்டகிரி உண்டு.

அங்கு பெற்றோர்கள் எனப்படுபவர்கள் அவரவர் பெற்றெடுத்த குழந்தைகளின் அடிமைகளாக இருப்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்பதோடு சதா தம் குழந்தைகளைப் பாராட்டித் தள்ளிக் கொண்டும் இருப்பார்கள். குழந்தை குப்புற விழுந்தால் பாராட்டு, குழந்தை சிறுமியாகி ஸ்கிப்பிங் ஆடத் தொடங்கி விட்டால் அது இமாலய சாதனை. 

ஸ்கிப்பிங் ஆடும் குழந்தை பள்ளியில் மாவட்ட அளவில் ஏதேனும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு கொண்டு வந்தால் அது என்னவோ தேசிய விருது பெற்றது போல ஊர் முழுக்க தண்டோரா போட வேண்டியது.

அத்துடன் நின்று விடுவதா?
மகள் தும்மினால் துடிப்பது? அவள் கண்ணில் நீர் வழிந்தால் தன் நெஞ்சில் உதிரம் சொட்டச் சொட்ட உருகுவது...
கையில் ஒரு சின்ன குண்டூசி குத்தினாலும் போதும் பதறித் துடிப்பது...
மகனோ, மகளோ ஒருவேளை சாப்பாட்டைத் தவிர்த்தாலும் தன் மேல் தான் ஏதோ தவறு என்பதாகக் கற்பனை செய்து கொண்டு 24 மணி நேரமும் குழந்தைகளின் நினைப்பாகவே இருப்பது.

அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கொண்டாடி, பெரிது படுத்திப் பேசி என் மகளாச்சே, என் மகன் போல வருமா? பப்பு, மிட்டு, செல்லம், வைரம், தங்கம், புஜ்ஜி என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சியே அவர்களை குட்டிச்சுவர் பண்ணுவது.
இப்படியும் சில பெற்றோர்கள் இந்த உலகில் ஜீவித்திருக்கிறார்கள்.

 இந்த மூன்று வகைப்பெற்றோரில் முதலாம் வகைப் பெற்றோர் மட்டுமே நார்மலானவர்கள். மற்ற இரண்டு பிரிவினருமே தங்களுக்கே தெரியாமல் தங்கள் பிள்ளைகளின் வாழ்வைத் தவறான வழிக்கு திசை திருப்புகிறார்கள் என்கிறார் உளவியல் நிபுணரான ஸ்ரீதர் மஹேஸ்வரி (பெண் பெயராயிருக்கிறதே என்று குழப்பம் வேண்டாம், அது அவரது கம்யூனிட்டி பெயராம்)

குழந்தைகளை இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே குட்டிச்சுவர் பண்ணும் அம்மா, அப்பாக்களுக்கு அவர் தரும் முக்கியமான பேரண்டிங் டிப்ஸ்கள் 4.
அதைப் பற்றி அனைத்துப் பெற்றோரும் அறிந்து கொண்டால் நலம்.
1. உங்கள் குழந்தைகள் பிறக்கும் போது வெற்றுச் சிலேடுகளாகவோ அல்லது எழுதப்படாத வெள்ளைத்தாள்களாகவோ பிறந்து விடவில்லை. நடத்தை மரபியல் (Behavior Genetics) தத்துவத்தின் படி ஒரு குழந்தையின்ஆளுமையில் 50% பிறவியிலேயே கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. மிச்சமுள்ளதில் 40 % குணநலன்கள் கலாச்சாரம், சக மனிதர்களுடனான பழக்க வழக்கங்கள், தாக்கம் உள்ளிட்டவறால் கட்டமைக்கப்படுகின்றன. 

ஆக ஒரு குழந்தையின் ஆளுமையைக் கட்டமைப்பதில் பெற்றோரின் பங்கு என்பது வெறும் 10% மட்டுமே என்றாகிறது. ஆனால், பெற்றோர் நினைத்துக் கொள்கிறார்கள், தங்கள் குழந்தையின் முழு வாழ்வுக்கும் தாங்களே பொறுப்பு என்பதாக நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பற்றியே சதா முழு நேரமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வீணான வேலை. குழந்தைகளின் ஆளுமைத் திறனில் வெறும் 10% பெற்றோர்களின் கையில் இருக்கிறதெனும் போது 100% தாங்கள் தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவர்களைக் கையாள்வது தவறு.

2. இரண்டாவதாக நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்களால் இந்த உலகுக்கு வந்தவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு மிக மிக அதிசயமானவர்களாகவும், அதி அற்புதமானவர்களாகவும், விலைமதிப்பற்றவர்களாகவும் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அவர்களை மற்றெல்லாக் குழந்தைகளையும் போல சாதாரணர்களாக வளர அனுமதியுங்கள். உங்களது குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித சாதனைகளையும் படைக்காத நிலையில் அந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு சின்னஞ்சிறு செயலையுமே கூட பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கி அற்புதம் நிகழ்த்தப்பட்டு விட்டதாக எண்ணச் செய்து தற்பெருமையில் திளைக்க அனுமதித்து விடாதீர்கள். உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரம் குழந்தைகள் பிறக்கின்றனர்.

 அவர்கள் அத்தனை பேரும் எப்படியோ அப்படித்தான் உங்களது குழந்தையும். உங்கள் குழந்தைக்கென்று ஸ்பெஷலாக தேவதை இறகுகளோ அல்லது சாத்தானின் கொம்புகளோ இல்லை. அதை பெற்றோரான நீங்களே உங்கள் அதீதமான பாராட்டுரைகளால் வரவைத்து விடாதீர்கள்.


3. மூன்றாவதாக குழந்தைகளை வளர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அதற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பலமணி நேரங்களை அர்ப்பணிக்கிறீர்கள். குழந்தைகளின் கல்வி, உணவு, பிற விருப்பங்கள், உடைகளுக்காக நீங்கள் உங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறீர்கள். அவர்களது தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக உங்களை கடுமையான உழைப்புக்கு உட்படுத்திக் கொள்கிறீர்கள். இதற்கிடையில் வீடு மற்றும் அலுவலகங்களில் உங்களுக்கென காத்திருக்கும் பிரச்னைகளையும் நீங்கள் நேர் செய்தாக வேண்டும். உங்களுக்கே உங்களுக்கான பிரச்னைகளை மட்டுமல்ல பள்ளியிலும், வீட்டிலும் உங்கள் குழந்தைகளுக்கு பிறரால் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கும் கூட தீர்வு கண்டாக வேண்டிய பொறுப்பு உங்களுடையதாகிறது. நடுவில் குழந்தைகளுக்கு ஆரோக்யம் சீர் கெட்டால் அதற்கும் சேர்த்து பெற்றோரின் கவனிப்பே அவசியமாகிறது, அப்படி இருக்கும் போது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தான உங்களது கனவுகளை மேலும் மேலுமென ஏன் ஏற்றிக் கொண்டே செல்ல வேண்டும்.

 நீங்கள் உங்கள் குழந்தைகளின் மீதான கனவுகளை முதலில் விலக்குங்கள். அவர்களையும் உங்களைப்போல நடத்துக்கங்கள், உங்களால் எப்படி பிறரது கனவுகளுக்கு உட்பட முடியாதோ, அப்படித்தான் உங்களது குழந்தைகளும், அவர்கள் மீது எதையும் எக்ஸ்ட்ராவாக திணிக்கப் பாடுபடாதீர்கள், அல்லது நம்பி ஏமாறாதீர்கள். இயல்பாக இருக்க, வாழ குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகுங்கள். 

உங்களது ரெஸ்பான்ஸிபிலிட்டியைக் கண்டு இயல்பாக உங்கள் குழந்தைகளுக்கும் அந்தக் குணம் பரவட்டும். அதை விட்டு விட்டு எதையேனும் மாற்றுகிறேன் என்று ஆரம்பிக்காதீர்கள், நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சு. அடிப்படையில் மனிதர்களை மனம் மாற்றுவது என்பது மிகக் கடினமான செயல். அவர்களாக மாறினால் தான் உண்டு. 

எனவே கூடுமானவரை உங்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக நேரம் செலவளிக்கப் பாருங்கள். வாழ்வின் வெளிப்புற மற்றும் உட்புற அழுத்தங்களை மீறி உங்களையும் சந்தோஷமாக ஆக்கிக் கொள்ளப்பாருங்கள், அது போதும்.
4. கடைசியாக ஒரு வார்த்தை. உங்களது 'பேரண்டிங் லட்சியம்' என்னவாக இருக்கிறது என்பது குறித்து யோசியுங்கள். 

ஒரு நல்ல அம்மா, அப்பா என்று பெயரெடுத்தால் போதுமா? உங்களது குழந்தைகள் உலகத்திலேயே ஆகச்சிறந்த குழந்தைகள் என்று பெயரெடுத்தால் போதுமா? உங்கள் லட்சியம் ஈடேறி விடுமா? பிறகு மற்றதெல்லாம் தேவையில்லையா? ஒரு நிமிஷம் நின்று நிதானியுங்கள். 

உங்களது பிள்ளை வளர்ப்பின் எந்தெந்த தருணங்களில் எல்லாம் நீங்கள் சந்தோஷமாக, மனநிறைவாக உணர்ந்தீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். அந்த தருணங்களில் மட்டுமே நிஜமாக நீங்கள் வாழ்வை அனுபவித்திருப்பது உங்களுக்கே புரியும்.

 எனவே தயவு செய்து லட்சியம், பொறுப்பு, கடமை, என்ற வார்த்தைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு உங்கள் குழந்தைகளுடன் நட்பாக இருக்கப் பழகுங்கள். எல்லாக் குழந்தைகளுமே தங்களை நண்பர்களாகப் பாவிக்கும் பெற்றோர்களையே மிகவும் விரும்புகிறார்கள். அது மட்டுமே இறுதிவரை உங்களைப் பிணைக்கும் பாசக்கயிறாகிறது.

இந்த நான்கு விஷயங்களையும் மனதில் கொண்டு நாம், நம் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கினால் தேவையில்லாத பல சிரமங்களைத் தவிர்க்கலாம்.

Source dinamani.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment