கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் கேள்விகளுக்கான விடைகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று (ஞாயிறு) நடைபெற்றது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் நடந்த இத்தேர்வில் 15.19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் 188 தேர்வு மையங்களில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இத்தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களுக்கு என்.டி.ஏ.அதிகாரப்பூர்வமான விடைகளை விரைவில் வெளியிட உள்ளது. இன்னும் ஓர் வாரத்திற்குள் அவை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடைத்தாள் வெளியானதும் அதில் ஏதேனும் தவறு இருப்பின் தேர்வர்கள் அதனை சரிசெய்ய விண்ணப்பிக்கலாம். திருத்தம் கோரும் ஒரு வினாவுக்கு ரூ.1000 கட்டணமாகப் பெறப்படும். திருத்தம் கோரும் விண்ணப்பங்களை என்.டி.ஏ. அந்தந்த பாடங்களில் வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து முடிவு எடுக்கும்.
திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிந்தால், விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும். மேலும், திருத்தம் கோரி விண்ணப்பித்தவருக்கு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்ற தகவல் தெரிவிக்கப்படாது.
விடைத்தாள் திருத்தப்பட்டால் புதிய விடைத்தாள் அடிப்படையில் மாணவர்களின் விடைத்தாள்கள் பதிப்பிடப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment