TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

சத்துணவு திட்டத்தில் ஊழியராக இருந்து ஆசிரியர் பணிக்கு வந்தவர்களும் டெட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்: விண்ணப்பிக்கும் தேதி முடிந்ததால் பணியில் நீடிப்பதில் சிக்கல்

         சத்துணவு திட்டத்தில் ஊழியராக இருந்து ஆசிரியர் பணிக்கு மாறியவர்களும் டெட் என்கிற ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டும். ஆனால் அதற்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிந்ததால் தற்போது ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. தமிழக சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அஞ்சல் வழியில் பட்டப் படிப்பு மற்றும் பிஎட் படித்துள்ளனர். அவர்கள் தங்களுக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களுக்காக சிறப்பு போட்டித் தேர்வு ஒன்றை கடந்த 2011ல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
அந்த தேர்வை 341 சத்துணவுப் பணியாளர்கள் தேர்வு எழுதினர். அதில் 135 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். அரசாணை 181ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி, பணி நியமனம் பெறும் மேற்கண்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 

இதற்கிடையே, 31.3.2019 தேதி நிலவரப்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் தொடர தகுதியற்றவர்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த கணக்கெடுப்பில் மேற்கண்ட சத்துணவு திட்டத்தில் இருந்து வந்த ஆசிரியர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
இதனால் அதிர்ச்சி அடைந்து சத்துணவுத்திட்டத்தில் பணியாற்றி ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள், தாங்கள் 5 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணி முடித்த பிறகும்கூட, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று எந்த அறிவிப்பும் வரவில்லை என்கின்றனர். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் 5 ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஆசிரியர் பணிக்கு மாறிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் இது போன்ற சிக்கலுக்குள் விழுந்துள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுத முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் அடுத்த ஆண்டுதான் இவர்கள் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment