சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் ராமேஸ்வர முருகன் ஆகியோருக்கு இயக்கத் தலைவர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், ஒருங்கிணைப்பாளர் இ. இளங்கோவன் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:
ஏழை, எளிய விளிம்பு நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்து படித்து பயனடைய 25 சதவீத இட ஒதுக்கீடு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மத்திய அரசுக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் உள்ள எந்த ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளியும் அச்சட்டத்தின்படி ஏழை மாணவர்களைப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை.
அண்மைக் காலமாகப் பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நகரங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற்று அமைக்கப்பட்டும், பல மெட்ரிக் பள்ளிகள் அச்சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட்டும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தைச் சரியாகப் பின்பற்றிடாமல் உள்ளன.
இச்சட்டத்தின்படி, ஏப். 22-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை தமிழக அரசுக் காலக்கெடு நிர்ணயித்து இருந்தபோதிலும், சி.பி.எஸ்.இ. கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியைத் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இன்று வரை ஏற்படுத்தாததால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் இச்செயல் அரசியல் சாசனத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.
கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய இத்திட்டத்துக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிற மத்திய அரசும் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையானது.
எனவே, உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
0 Comments:
Post a Comment