ஏ டிஎம்மில் பணம் எடுக்கும்போது அக்கவுன்டில் பணம் பிடிக்கப்பட்டும், கையில் பணம் வரவில்லை என்றால் அந்தப் பணம் மீண்டும் நமது அக்கவுன்டுக்கு வந்துவிடும். ஆனால், அப்படி அக்கவுன்டில் பணம் கிரெடிட் ஆவதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு பெறலாம் என ரிசர்வ் வங்கி விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் நிதியாண்டில் 'பேங்கிங் ஓம்பட்ஸ்மேன்' எனப்படும் வங்கி தீர்ப்பாயத்துக்கு வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த புகார்களில் சுமார் 16,000 புகார்கள், அதாவது மொத்த புகார்களில் 10 சதவிகிதம், ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அக்கவுன்டில் பணம் பிடிக்கப்பட்டும், கையில் பணம் வரவில்லை என்ற வகையைச் சேர்ந்தவைதான்.
இந்த நிலையில், இவ்வாறு ஏடிஎம்மில் பணம் வராமல், அதேசமயம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பிடிக்கப்பட்ட பணம், புகார் பெறப்பட்ட ஏழு வேலை தினங்களுக்குள் மீண்டும் உங்கள் அக்கவுன்ட்டுக்கு வரவில்லை என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் என்ற கணக்கில், சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து நீங்கள் இழப்பீடாகப் பெறலாம் என ரிசர்வ் வங்கியின் விதி கூறுகிறது. இந்த விதி 2011-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலில் உள்ள போதிலும், இது குறித்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அறியாமல் உள்ளனர்.
உங்கள் ஏடிஎம் கார்டை, நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மிலோ அல்லது வேறு வங்கி ஏடிஎம்மிலோ, எதில் பயன்படுத்தி இருந்தாலும் சரி, கணக்கில் பிடிக்கப்பட்ட பணம் உங்கள் கைக்கு வராமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ரிசர்வ்
வங்கியின் விதிமுறைகள்:
1. கணக்கு வைத்திருக்கும் சொந்த வங்கியின் ஏடிஎம் அல்லது மற்ற வங்கியின் ஏடிஎம் அல்லது ஒயிட் லேபிள் ஏடிஎம் ( White label ATMs) எனப்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்களின் ஏடிஎம் என எந்த ஏடிஎம்மில் பயன்படுத்தி இருந்தாலும், உடனடியாக இது தொடர்பாக உங்களுக்கு ஏடிஎம் கார்டு கொடுத்த வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும்.
2. ரிசர்வ் வங்கி விதிப்படி, ஏடிஎம் எந்திர பாக்ஸில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள், அவர்களது தொலைபேசி எண்(கள்)/ கட்டணமில்லா பேசும் எண்கள் (Toll free)/ உதவி கோரும் ஹெல்ப் டெஸ்க் (Help Desk) எண்கள் ஆகியவை தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதேபோன்று ஒயிட் லேபிள் ஏடிஎம்களிலும் புகார் தெரிவிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்/ உதவி கோரும் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
3. ஏடிஎம்மில் பணம் வராமல், அதே சமயம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு விட்டால், உங்களுக்கு கார்டு வழங்கிய வங்கி, புகார் பெறப்பட்ட ஏழு வேலை நாள்களுக்குள் அந்தப் பணத்தை மீண்டும் உங்கள் அக்கவுன்ட்டுக்கு கிரெடிட் செய்ய வேண்டும்.
4. அவ்வாறு புகார் அளித்தும், ஏழு வேலை தினங்களுக்குள் உங்கள் பணம், உங்கள் அக்கவுன்டில் மீண்டும் வரவு வைக்கப்படாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் இழப்பீடாக 100 ரூபாய் வீதம் கணக்கிட்டு, அந்தப் பணத்தைச் சம்பந்தப்பட்ட வங்கி, உங்கள் அக்கவுன்டில் கிரெடிட் செய்ய வேண்டும். அதே சமயம், இந்த இழப்பீட்டைப் பெற நீங்கள் உங்கள் புகாரை, உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனை நடந்த 30 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
5. இதையும் மீறி உங்கள் புகாருக்கு உரிய தீர்வை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி தீர்த்து வைக்காமல் போனாலோ அல்லது வங்கியின் நடவடிக்கை உங்களுக்குத் திருப்தி அளிக்காமல் போனாலோ, நீங்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பதில் கிடைத்த 30 தினங்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்துக்குப் புகார் அளிக்கலாம். ஒருவேளை உங்கள் வங்கி, உங்களுக்கு எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றாலும், வங்கியிடம் புகார் கொடுத்த 30 தினங்களுக்குள் வங்கி தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கலாம்.
நக்கீரன்
0 Comments:
Post a Comment