TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கோடை விடுமுறையில் அருகிலிருக்கும் கணினிப் பயிற்சி மையங்களில் சேர்ந்து, பள்ளி மாணவர்கள் தாம் பயிலும் வகுப்புக்கேற்ற கணினிப் பயிற்சிகளைப் பெறுவதும் விடுமுறையைப் பயனுள்ளதாக்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தாம் பயிலும் வகுப்பு நிலைக்கு ஏற்றவாறு கணினிப் பயிற்சியைத் திட்டமிடுவது அவசியம். அடிப்படைக் கணினி அறிந்தோர், தமக்கு விருப்பமான துறை சார்ந்தோ எதிர்கால உயர்கல்வி இலக்கு நோக்கியோ இந்தக் கணினிப் பயிற்சியைத் தீர்மானிக்கவும் செய்யலாம்.

மையத்தைத் தேர்ந்தெடுப்போம்
இருப்பிடத்துக்கு அருகில் அமைந்திருக்கும், திறமையான பயிற்றுநர்கள், பயிற்சி மையத்தைத் தேர்வு செய்யலாம்.

சில மையங்களில் பயிற்சியின் முடிவில் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்குவதைப் பொறுத்துக் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள்.
அடிப்படைக் கணினிப் பயிற்சிக்குச் சான்றிதழ் அவசியமில்லை என்று நினைத்தால், அதைத் தவிர்த்துவிட்டுக் கட்டணத்தில் சலுகை பெறலாம். அதேபோன்று பயிற்சி மையங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வு, பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் இந்தக் கட்டணச் சலுகையைக் கேட்டுப் பெறலாம்.
கற்றலை விரைவாக்க
தனியார் பயிற்சி மையங்களில் பெறும் முறையான பயிற்சியுடன் மாணவருக்கான சேவை மையங்கள், வீட்டிலுள்ள கணினியில் இணையத்தின் உதவியுடன் கணினி கற்றலை ஆழமாகவும் அலுப்பின்றியும் பெற முயலலாம். உரிய இணையதளங்கள், யூட்யூபில் கிடைக்கும் காணொலிப் பாடங்களின் உதவியுடன் அடிப்படைகளை அறிந்துகொள்ளலாம்.
அடிப்படை அறிவோம்
கீழ் வகுப்புகளில் பயில்வோர், போதுமான கணினி அறிமுகம் இல்லாதவர்கள் இந்த வகையில் கணினி அடிப்படைச் செயல்பாடுகளை அறிந்துகொள்ளலாம். அடுத்த கட்டமாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் வேர்டு, பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் ஆகிவற்றைப் பயிலலாம். வகுப்புகளில் பாடம் சார்ந்த திட்டப் பணிகளுக்குக் கணினி உதவியுடன் தயாராக இவை உதவும்.
பாடம் சார்ந்து இணையத்தில் தேவையான கருத்துகளைக் கண்டடைவதற்கு, தேடுபொறியைச் சரியான முறையில் பயன்படுத்தும் வழிகளை அறிவது முக்கியம். ஃபோட்டோஷாப் உதவியுடன் படங்களுக்கான அடிப்படை எடிட்டிங், அவற்றைத் தொகுப்பது, எழுத்துகளைச் சேர்ப்பது போன்றவற்றையும் அறிந்துகொள்வது நல்லது.
இவை தவிரக் கணினியில் விரைவாக இயங்க முறையான தட்டச்சு தெரிந்திருப்பது கைகொடுக்கும். கணினியில் தட்டச்சுக்கான மென்பொருளை நிறுவியோ, ஆன்லைனில் உரிய இணையதளங்களின் உதவியுடனோ தட்டச்சு பழகலாம்.
உயர்நிலை மாணவர்களுக்கு
அடிப்படைக் கணினி அறிவு பெற்ற 9, 10-ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அடுத்தகட்டக் கணினிப் பயிற்சிகளுக்குத் தயாராகலாம். எம்.எஸ். ஆபீஸ், அடோப் ஃபோட்டோஷாப், அடோப் பேஜ்மேக்கர், கோரல் ட்ரா ஆகியவற்றைப் பயிலலாம்.
அலுவலகப் பயன்பாட்டுக்கான அடிப்படைக் கணினிச் செயல்பாடுகளை இவை வழங்கும். அங்கீகாரம் பெற்ற சில பயிற்சி மையங்களில் இவற்றோடு மேலும் சில பயிற்சிகளும் அளிக்கப்பட்டு டி.சி.ஏ. என்ற பட்டயப் படிப்பு வழங்கப்படுகிறது.
மேல்நிலை மாணவர்களுக்கு
அடிப்படை, கூடுதல் கணினிப் பயிற்சி பெற்றவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், உயர்கல்வி - படிக்க விரும்புபவர்கள் துறை சார்ந்து அடுத்தகட்டக் கணினிப் பயிற்சிகளைப் பெறலாம். அந்த வகையில் பொறியியல், கணினி அறிவியல் துறைகளுக்கு ஆட்டோகேட் படிப்பின் பல நிலைகளைப் பயிலலாம்.
அடுத்ததாக சி, சி++, ஜாவா, பைதான் போன்றவற்றைக் கிடைக்கும் அவகாசத்துக்கு ஏற்ப அடுத்தடுத்துப் பயிலலாம். வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் மாணவர்கள் டேலி பயில்வது சிறப்பு.
கணினிப் பயிற்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கியவர்: அ.திருவேல் முருகன், கணினிப் பயிற்சியாளர், திருவண்ணாமலை.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment