TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பேரிடர் காலத்தில் உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய?! கைகொடுக்கிறது #TNSmart ஆப்

 யற்கை இடர்ப்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக தமிழக அரசின் அதிகாரபூர்வமான தகவல்களையும், இடர்ப்பாடுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் தங்கள் மொபைலிலேயே அறிந்துகொள்ள உதவுகிறது TN SMART ஆண்ட்ராய்டு ஆப்.
அரைமணி நேர செய்தியில் வரும் 1 நிமிட வானிலை செய்திகளை மட்டுமே கேட்டு விவசாயம் செய்து வந்த காலம் மாறி, வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் அரை கி.மீ. நகர்ந்தது என்பதைக் கூட பிரேக்கிங் நியூஸில் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இன்றைக்கு எவ்வளவோ நவீன தொழில்நுட்பங்கள் பெருகியிருந்தாலும் கூட இன்னுமே பேரிடர் சமயத்தில் தகவல்களை வாட்ஸ் அப் வழியாகவோ, ஃபேஸ்புக் மூலமாகவோதான் தெரிந்துகொள்கிறோம்.
இன்றைக்குப் பரவும் போலிச்செய்திகள் பலவும் அங்கிருந்துதான் உருவாகின்றன. இதைத் தடுப்பதற்கு அரசும், ஊடகங்களும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அப்படி அரசின் தகவல்களை நேரடியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக உருவானதுதான் இந்த TN SMART ஆப்.
அது என்ன TN SMART செயலி?
தமிழக தேசிய பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட செயலி இது. இந்த செயலி மூலம் தங்கள் பகுதியின் வானிலை அறிக்கை மற்றும் இயற்கை இடர்ப்பாடுகள் குறித்தும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வழங்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
TN SMART செயலியின் பயன்கள்
வானிலை நிலவரம் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகள் குறித்து பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த செயலி. TN SMART செயலியைப் பயன்படுத்தும் பயனாளர் தேர்வு செய்யும் இடத்தின் வானிலை அறிக்கை, மழையளவு விபரம், செயற்கைக்கோள் புகைப்படங்கள் (IMD), பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் வரைபடங்கள் ஆகியவற்றினை அறிந்து கொள்ளலாம். மேலும், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகளையும் இந்த செயலி வழங்குகிறது.
செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
Google play store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திடுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்த பிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்தால் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கேட்கும். புதிய பயனாளர் என்றால் கீழே இருக்கும் 'New User - Register' என்ற நீல நிற பட்டனை அழுத்த வேண்டும்.
திரையில் தோன்றும் கேள்விகளுக்குப் பதில் அளித்த பிறகு தங்கள் அலைபேசி எண்ணை யூசர் ஐடியாக வைத்துக்கொண்டு TN SMART ஆப்பில் உள்நுழைய முடியும். பயனாளர் இருக்கும் இடத்தைத் துல்லியமாக பதிவுசெய்ய GPS வசதியும் பயனாளர் வசதிக்கேற்ப ஆங்கிலம்/தமிழ் என்று இரு மொழிகளில் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனாளர் ID மற்றும் கடவுச்சொல் கொடுத்து ஆப்பில் உள்நுழைந்தவுடன் பேரிடர் விழிப்பறிக்கைகளை காண்க (view disaster alerts) என்ற பட்டனை கிளிக் செய்தால் அரசு அதிகாரபூர்வமாக வழங்கியுள்ள விழிப்பறிக்கை (Alerts) களை பார்க்கமுடியும்.
Weather forecast என்ற பட்டன் வானிலை அறிவிப்புகளுக்கும், Observed Rainfall என்ற பட்டன் மழையளவு விவரத்தைப் பார்க்கவும், sattelite images என்ற பட்டன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் (IMD) பார்க்கவும், Vulnerable Locations என்ற பட்டனை அழுத்தி பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் வரைபடங்களையும் பார்க்க முடியும்.
ஆபத்து நேரத்தில் TN SMART செயலியில் என்ன செய்ய வேண்டும்?
அவசர நிலையில் ஏதேனும் தகவல் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க send message click here என்ற பட்டனை சொடுக்கினால் போதும். பயனாளர் வசதிக்கேற்ப உதவி தொலைபேசி எண்களாக மாவட்டத்திற்கு 1077 என்ற எண்ணும், மாநிலத்திற்கு 1070 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் இயற்கை இடர்ப்பாடுகளில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால் உடனடியாக TN SMART செயலியில் உள் நுழைந்தவுடன் கடைசியில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் DO'S AND DONT'S என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனடியாக இயற்கை இடர்ப்பாடுகளின் பட்டியலும் அதன் கீழ் விவரம் எந்த மொழியில் வேண்டும் என்ற பட்டனும் திரையில் தொன்றும். மொழி தேர்வு செய்தவுடன் இயற்கை இடர்ப்பாடுகள் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது போன்ற விவரங்கள் காட்டப்படும்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment