TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பணி விவரங்களை கணினிமயமாக்கும் திட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய மற்றும் பணி விவரங்களை கணினி மயமாக்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிதி மேலாண்மை மற்றும் மனித வளமேலாண்மை ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் (IFHRMS - Integrated Financial and Human Resource Management System) நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தின்கீழ், அரசின் வருவாயை இணையவழி மூலம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அரசின் நிகழ்நேர வரவை உடனுக்குடன் அறிய இயலும். இத்திட்டத்தின் மூலம் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு ஊதியப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வுபெறும் நாள் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (Drawing and Disbursing Officers) நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும்.
பணிப் பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். ஆதாரப்பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும். இதற்காக கணினி இயக்குநர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது இதனை படிப்படியாக விழுப்புரம் மாவட்ட அரசுஅலுவலகங்களில் நடைமுறைப்படுத்த முயன்றபோது, தரவுகள் சரியாக 'அப்லோட்' ஆகாமல் சர்வர் ஒத்துழைக்கவில்லை என்று அரசுத்துறை அலுவலகத்தில் ஊழி யர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்வொர்க், சர்வர் பிரச்சினை
இதுகுறித்து கல்வித்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
முதற்கட்டமாக ஒவ்வொருதுறையிலும் 200 முதல் 300 பணியாளர்களின் ஊதியப் பட்டியலைகணினி வழியாக கருவூலத்துக்கு அனுப்ப முயன்றபோது நெட்வொர்க், சர்வர் பிரச்சினையால் அனுப்ப இயலவில்லை. 
கல்வித்துறையில் செஞ்சி வட்டார ஆசிரியர்களின் ஊதிய பட்டியலை கணினி வழியே அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால் நேற்றுவரை ஊதியம் சென்று சேரவில்லை. இதே பிரச்சினை காவல், வருவாய் என அனைத்து துறைகளிலும் உள்ளது.
இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூன் முதல் அனைவருக்கும்...
அடுத்த மாதம் அனைத்து ஊழியர்களின் சம்பளப் பட்டியலும் இதில் அனுப்பப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சினையை சரி செய்வதாக, இப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ரூ.288.91 கோடி அரசு நிதியானது ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.லூர்து சேவியர் கூறும்போது, "ஆன் லைன்மூலம் இப்பணியை மேற்கொண்டால் நேரம் பெருமளவு மிச்சமாகும். அடுத்தமாதம் அனைத்து ஊழியர்களுக்கும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால், தற்போதைய தொழில்நுட்ப பிரச்சினைகளை அரசு விரைந்து சரி செய்து, ஊதியம் குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment