TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

நீதிமன்ற உத்தரவு: பாதிக்கும் ஆசிரியர்களின் எதிர்கால நிலை என்ன?

ஊதியம் நிறுத்தம், பணிநீக்கம் செய்ய வாய்ப்பு போன்ற பிரச்னைகளால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு விதிமுறைகளின்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தகுதி இல்லாதவர்களை ஆசிரியர் பதவியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என புதன்கிழமை உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக 1,500 ஆசிரியர்கள் மன உளைச்சலால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை குறுகிய காலத்தில் அரசு எவ்வாறு நிரப்பும் என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது. 
1,500 குடும்பங்களின் வாழ்வாதாரம்: இந்தப் பிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், நாங்கள் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எங்களுக்குப் போதிய அவகாசமும் வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக நாங்கள் மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதால் குடும்பத்தின் எந்தவொரு பொருளாதாரத் தேவையையும் நிறைவு செய்ய முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். 
இந்த நிலையில் பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் எங்களது எதிர்காலமே பாழாகி விடும். எனவே, கடந்த 8 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு நாங்கள் ஆற்றிய சேவையை தமிழக அரசு கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் இந்தத் தகுதித் தேர்விலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கத் தேவையான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றனர். 
போதிய அவகாசம் வழங்காதது ஏன்? இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், தங்களின் பாடங்களில் திறமையாக சாதித்த ஆசிரியர்கள் எட்டு ஆண்டுகளாக ஒரே பாடத்தினை நடத்திவிட்டு அனைத்துப் பாடங்களையும் தகுதித் தேர்வில் எழுதுபோது பல சிரமங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. மேலும், விதிமுறைகளின்படி கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறை என மொத்தம் 16 டெட் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 5 முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு ஆசிரியர்கள் என இருதரப்பிலும் எதிர்பாராத வகையில் தவறு நடந்திருக்கிறது. எனவே, மாணவர்களின் எதிர்காலம், அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 
கருணை அடிப்படையில்... இது தொடர்பாக தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி கருணை அடிப்படையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார். 
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் நிலை என்ன என்பதை ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். கூடுதல் அவகாசத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. இருப்பினும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பிரச்னை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Source dinamani

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment