பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும், நிபந்தனை இன்றி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கமாக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் மாதம்தான் தொடங்குவது வழக்கம்.
தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்திலேயே தங்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றன.இதனையடுத்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை சமாளிக்க, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து எல். கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும்10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்தது.
இந்நிலையில் பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக பெற்றோர் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும், நிபந்தனை இன்றி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment