TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

10-ம் வகுப்புத் தேர்வை எழுதாத 22 ஆயிரம் மாணவர்கள்; என்ன காரணம்?- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி

தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வை 21 ஆயிரத்து 769 மாணவர்கள் எழுதாத காரணத்தைக் கண்டறிந்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ''10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்துகிறது. இதற்காக 2018-2019 கல்வியாண்டில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களில் தேர்வு எழுதுவதற்காக பதிவுசெய்தவர்களின் (Nominal Roll) எண்ணிக்கை 9,59,618 ஆகும்.ஆனால் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9,37,849 தான். மீதமுள்ள 21 ஆயிரத்து 769 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது.

இதில் இடைநிற்றல், இடம் மாறிச்சென்ற மாணவர்கள், சான்றிதழ் பெறாதவர்கள் என சராசரியாக சுமார் 5000 மாணவர்கள் எடுத்துக்கொண்டாலும் மீதமுள்ள 16 ஆயிரத்து 769 பேரின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. அவர்களை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுப்பது யார்? தேர்வெழுதாத மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம்?
100 சதவீதம் தேர்ச்சிக்காகத் திட்டமிட்டு, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத முடியாமல் தடுக்கப்படுகிறார்களா? அல்லது அதிகாரிகள் 100 சதவீதத் தேர்ச்சிக்காக வலியுறுத்துவதால் மாணவர்கள் வலுக்கட்டாயமாக இடையில் நிறுத்தப்படுகிறார்களா? இந்தப் போக்கு அரசுப்பள்ளிகளிலும் தொடர்கிறதா என்பது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
ஆண்டுதோறும் தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உதாரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்து 397 பேர். கடந்த ஆண்டு தேர்வெழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 94 என்ற சூழலில் இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 21 ஆயிரத்து 769 பேர் தேர்வு எழுதாத நிலையில் கூடுதலாக 7,675 மாணவர்கள் தேர்வெழுத முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முழுமையாக ஆய்வுசெய்து எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்வாதாரமான கல்வியைக் காப்பாற்றிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Source: தி இந்து காமதேனு
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment