பள்ளிகளில் நிர்வாக பணிகளை கவனிக்க தலைமை ஆசிரியர்கள் பணிக்கு தவறாமல் வர வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற்றுதான் விடுமுறைஎடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையே வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் நிர்வாக பணிகளை கவனிக்க தலைமையாசிரியர்கள் பணிக்கு தவறாமல் வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைதெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒன்று முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளில் நிபந்தனையின்றி மாணவர்களைச் சேர்க்க வேண்டும். அருகே உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பட்டியலை பெற்று அவர்களை தங்கள் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இதற்கிடையே அன்றாட அலுவல்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், தோல்வியுற்ற மாணவர் உடனடித் தேர்வு எழுத வழிகாட்டுதல், மதிப்பெண் பட்டியலில் மாணவர் விவரங்களை திருத்தம் செய்தல், புதிய மாணவர் சேர்க்கை பணிகள், எமிஸ் தகவல்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிஉள்ளது.
பணி நேரத்தில் காரணமின்றி...
எனவே, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு தவறாமல் வர வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற்றுதான் விடுப்பு எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியருடன் பள்ளி அலுவலக பணியாளர்களும் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பணி நேரத்தில் காரணமின்றி ஊழியர்கள் பள்ளிகளில் இல்லாமல் இருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நிர்வாகப்பணிகளை கவனிக்க ஆசிரியர்களை சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment