சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனை பயணிகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அரக்கோணம் - செங்கல்பட்டு அகலப்பாதை மின்மயமாக்கல் பணி துவங்கியபோது அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகத்தினர் இப்பணிகள் தங்களது விமான இயக்கத்தை பாதிக்கும் எனக்கூறி இப்பணிக்குத் தடை கோரினர். இதைத் தொடர்ந்து தக்கோலம் முதல் செங்கல்பட்டு வரை மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன.
தெற்கு ரயில்வே நிர்வாகம் இப்பாதையில் கல்லாற்றில் இருந்து மேல்பாக்கம் வழியே அரக்கோணம் ரயில் நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிய பாதையை அமைத்தது. இப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தன. இப்பாதையை அரக்கோணம் ரயில் நிலையத்தோடு இணைக்கும் சிக்னல்கள் அமைக்கும் பணிகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனிடையே கல்லாற்றில் இருந்து பெருமூச்சி வழியாக அரக்கோணம் வரையில் இருந்த பழைய பாதையும் துண்டிக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே புதிய பாதையில் அரக்கோணம் - தக்கோலம், புதுச்சேரி - திருப்பதி பயணிகள் ரயில்கள், மதுரை - குர்லா விரைவு ரயில், நாகர்கோயில் - மும்பை விரைவு ரயில்கள் டீசல் என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. இந்நிலையில் சுற்றுவட்டப்பாதையில் இரு சர்க்குலர் ரயில்கள் எதிரெதிர் திசையில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை அறிவித்தது.
சர்க்குலர் ரயில்கள் இயக்கம்: செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணி அளவில் நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் தனது முதல் பயணத்தை சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் பாதையில் துவக்கியது. இதனையடுத்து எதிர்திசையில் இரண்டாம் சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் வழியே துவங்கியது. அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நேரமான மதியம் 12.30க்கு பதில் 35 நிமிட தாமதத்துடன் 1.05க்கு அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு ரயில் வந்தது.
சுற்றுவட்டப் பாதையில் செல்ல இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வந்த எம்இஎம்யு ( மெயின் லைன் எலெக்ட்ரிக் மோட்டார் யுனிட்) ரயிலை அரக்கோணத்தில் அரக்கோணம் ரயில்பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பிரபாகரன், சரவணன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். இந்த ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த ரயில் புதியபாதையில் 1.10க்கு தனது பயணத்தை அரக்கோணத்தில் இருந்து துவங்கியது. இதில் ரயிலில் பயணிகள் சங்க நிர்வாகிகளும் முக்கியப் பிரமுகர்களும் பயணிகளோடு பயணமாயினர்.
இதையடுத்து எதிர்திசையில் சென்னை கடற்கரையில் காலை 9.50க்கு புறப்பட்ட செங்கல்பட்டில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் திருமால்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தநிலையில் அங்கு பயணிகள் சார்பிலும், ரயில்வே பணியாளர்கள் சார்பிலும் புதியபாதையில் முதலில் பயணத்தை துவக்க இருந்த மின்சார ரயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து அங்கு புறப்பட்ட இந்த மின்சார ரயில் அரக்கோணம் ரயில்நிலையத்தை பிற்பகல் 2.25க்கு அடைந்து தொடர்ந்து 2.30க்கு சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றது.
இரண்டு ரயில்களின் சேவை ரத்து: சுற்றுவட்டப் பாதையில் ரயில் சேவை தொடங்கிய நிலையில், கடற்கரை-திருமால்பூர்-சென்னை கடற்கரை சென்று வரும் (ரயில் எண் 66041-66042) ரயில் சேவையும், கடற்கரை-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை கடற்கரை ரயில் சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் 6 சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
கட்டணம் மிக மிகக் குறைவு
பஸ் பயணத்தில் கட்டணம் மிக உயர்வு என்பது மட்டுமல்லாமல் பயண நேரமும் மிகவும் அதிகமாகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தைத்தான் விரும்புகின்றனர்.
உதாரணமாக அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்வதற்கு பேருந்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை கட்டணம். ஆனால் பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.10 மட்டுமே.
பொதுவாக அலுவலகங்களுக்குச் செல்வோரும், பிற பணிகளுக்குச் செல்வோரும் சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் ரயில் கட்டணம் மிக, மிகக் குறைவு. அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயிலில் ரூ.15 மட்டுமே. சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் மாதத்துக்கு ரூ.270 மட்டுமே. ஆனால் பேருந்தில் கட்டணம் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.55.
விரைவுபடுத்தக் கோரிக்கை
தற்போது, தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில் கடற்கரையிலிருந்து மீண்டும் கடற்கரைக்குச் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, பயணிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குமான இச்சேவையை விரைவு ரயில்சேவையாக மாற்றவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மக்கள் வரவேற்பு
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டிலிருந்து மேற்கு மாவட்டங்களான தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, மாவட்டங்களுக்கும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இனி காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து செல்லலாம். அதுபோல், அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி,பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லலாம். மேலும், அரக்கோணத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்பட தென்மாவட்டங்களுக்கு இனி எளிதாக பயணிக்கலாம்.அதுபோல், கட்டடத்தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், பெருநிறுவன ஊழியர்கள்,சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு பெரிதும் உதவிடும் வகையாக இந்த வட்ட வழித்தட ரயில் சேவை திட்டம் அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment