இன்று இந்தியா முழுவதும் பல பணப் பரிவர்த்தனைகள் மொபைலில்தான் நடக்கின்றன. அனைத்து விஷயங்களும் நமக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலமே தெரிவிக்கப்படுகின்றன. அப்படி வருமான வரித்துறை எச்சரிக்கை செய்த எஸ்.எம்.எஸ் மோசடி ஒன்றைப் பற்றி பார்ப்போம். இந்த மோசடியில் வருமான வரித்துறை அனுப்புவதுபோல மக்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகின்றன. அதில் நீங்கள் அதிகமாகச் செலுத்திய வரியை ரீஃபன்ட் செய்ய வேண்டும், அதற்குக் கொடுக்கப்பட்ட லிங்க்கில் கிளிக் செய்து வங்கிக் கணக்கின் தகவல்களைக் கொடுக்குமாறு கேட்கும். இதன்மூலம் பலரின் தகவல்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது வருமான வரித்துறை.
சில நேரங்களில் தவறான ஒரு அக்கௌன்ட் நம்பரைக் குறிப்பிட்டு அந்தக் கணக்குக்குத் தொகையை ரீஃபன்ட் செய்வதாக கூறப்படும்.அக்கௌன்ட் நம்பர் தவறென்றால் கொடுக்கப்பட்ட லிங்க்கை கிளிக் செய்து சரியான தகவல்களைக் கொடுக்குமாறு எஸ்.எம்.எஸ் வரும். நாமும் பதறிப் போய் தகவல்களைக் கொடுத்துவிடுவோம். இப்படி டெபிட் கார்டு தகவல்கள் பல நேரங்களில் பெறப்படுகிறதாம்.
கிளிக் செய்தால் வரும் இணையதளமும் அப்படியே உண்மையான இணையதளம் போன்றே இருக்கும். இப்படி வந்த எஸ்.எம்.எஸ் லிங்க்கில் SBI தளம்போல் அப்படியே இருப்பதாக ட்விட்டரில் ஒருவர் தெரிவித்தார். இதைப் போன்ற டிஜிட்டல் மோசடிகளை 'Phishing' என்று அழைப்பர். இந்த எச்சரிக்கையை சில மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை விடுத்திருந்தாலும் நிதியாண்டு தொடக்கமான இந்த ஏப்ரலில்தான் இது நிகழ அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால் உஷாராக இருங்க மக்களே!
வருமான வரித்துறை எச்சரிக்கை
இந்த டிஜிட்டல் யுகத்தில் நிதி சார்ந்த விஷயங்கள் எந்த அளவுக்கு எளிமையாகியிருக்கிறதோ, அதே அளவு ஆபத்தாகவும் ஆகியிருக்கிறது. அதனால் பயனாளர்களான நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வங்கிகள் தொடங்கி வருமான வரித்துறை வரை கூறுவது ஒன்றைத்தான். டெபிட் கார்டு தகவல் கேட்டு யாரும் போன் செய்யவோ, எஸ்.எம்.எஸ் செய்யவோ மாட்டோம் என்பதுதான் அது, இதைப் புரிந்துகொண்டாலே இதைப் போன்ற மோசடிகளில் இருந்து பெரும்பாலும் தப்பித்துவிட முடியும்.
0 Comments:
Post a Comment