பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் எண் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் இனி செயல்படும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் எண், 12 இலக்கங்களைக் கொண்ட தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடையாள மற்றும்முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது
அரசு மற்றும் அரசு சாரா சேவைகள், வங்கி சேவை, செல்பேசி இணைப்பு உள்ளிட்டவை பெற ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் எண் அட்டைகள் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே தொடக்கத்தில் வழங்கப்பட்டு வந்தன.
பின்னர், அஞ்சல் நிலையங்களிலும் இச்சேவை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி, 2017, ஜூலை மாதம் ஆதார் திருத்தம் செய்யும் சேவையும், நவம்பர் மாதம் ஆதார் எண் பெறுவதற்கான சேவையும் தொடங்கப்பட்டன.
316 அஞ்சல் நிலையங்களில்...
சென்னை நகர மண்டல அஞ்சல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 316 அஞ்சல் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
1.37 லட்சம் ஆதார் திருத்தங்கள்
இந்த மையங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 18,648 ஆதார் பெயர்பதிவும், 1.37 லட்சம் ஆதார் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. புதிதாக ஆதார் எண் பெற கட்டணம் கிடையாது. திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50-ம் , பிரிண்ட் அவுட் எடுக்க ரூ.30-ம்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் உள்ள 4 அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்பட உள்ளது. இதன்படி, முதற்கட்டமாக அண்ணாசாலை , பாரிமுனை, தி.நகர் மற்றும் தாம்பரத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் சேவை மையங்கள் விடுமுறை நாட்களில் செயல்படும்.
இதில், அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் கடந்த 7-ம் தேதியும், பாரிமுனையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஏப்.21-ம் தேதியும் ஞாயிற்றுக்கிழமையன்று இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தி.நகர் மற்றும் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் இச்சேவை தொடங்கப்படுகிறது.
இதன் மூலம், பொதுமக்கள் அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இச்சேவை மையங்களுக்குச் சென்று ஆதார் எண் பெற பெயர் பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை வசதியாக மேற்கொள்ளலாம். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதற்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
Source: தி இந்து - காமதேனு.
http://dhunt.in/60MZA?s=a&ss=wsp
0 Comments:
Post a Comment