TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தனியார் பள்ளியில் படித்த 2 மகள்களை அரசு பள்ளியில் சேர்த்த டாக்டர்

அரக்கோணம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை 46 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியையாக வெண்ணிலா, உதவி ஆசிரியராக வினோத்குமார் உள்ளனர்.கடந்த கல்வியாண்டில் அரக்கோணம், சுவால்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அரசு தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அரக்கோணத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் ராவணன், அவரது மனைவி பூங்குழலி ஆகியோர் தங்களது மகள்களான பூந்தளிர், பூந்துளிர் ஆகிய இரட்டை பெண் குழந்தைகளை நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பில் சேர்த்தனர்.
இதுகுறித்து டாக்டர் கூறியதாவது:எனது இரட்டை பெண் குழந்தைகள் ஏற்கனவே அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்தனர். அவர்களை அங்கிருந்து மாற்றி சுவால்பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் 2ம் வகுப்பில் சேர்த்துள்ளேன். அரசுப்பள்ளியில் படிப்பதன் மூலமாக மனம், அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். இப்பள்ளியில் எனது பிள்ளைகளை சேர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றார். இதையடுத்து டாக்டர் ராவணன் குடும்பத்தினருக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
S
Source from: தினகரன் நாளிதழ்
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment