நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை (4101), கோயம்புத்தூர் (4102), கடலூர் (4103), காஞ்சிபுரம் (4104), கரூர் (4105), மதுரை (4106), நாகர்கோவில் (4107), நாமக்கல் (4108),சேலம் (4109), தஞ்சாவூர் (4110),திருவள்ளூர்(4111), திருச்சிராப்பள்ளி (4112), திருநெல்வேலி (4113), வேலூர் (4114) ஆகிய 14 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத, விரும்பும் மையங்களின் குறியீட்டு எண்ணைக் குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.
அந்த வகையில் மதுரையை மையமாகத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஹால் டிக்கெட்டில் தேர்வுமைய முகவரியில் குளறுபடி உள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறியதாவது: மதுரையை மையமாகத் தேர்ந்தெடுத்த எனக்கு, திருநெல்வேலியில் உள்ள பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு மதுரை என வந்துள்ளது. நான் மதுரையில் தேர்வு எழுதச் செல்வதா, திருநெல்வேலிக்கு தேர்வுஎழுதச் செல்வதா எனக் குழப்பமாக உள்ளது. ஆன்லைன் மூலமும், ஹெல்ப்-லைன் மூலமும் புகார் தெரிவித்தாலும் முறையான பதில் இல்லை. என்னால் தேர்வு எழுத முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றார்.
தீர்வு என்ன?
இதுதொடர்பாக, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர் ஒருவர் கூறியதாவது: தேர்வு மைய முகவரியில் உள்ள குளறுபடி எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, ஹால் டிக்கெட்டில் ஏதேனும் பிழைகள், தேர்வு மைய முகவரியில் குழப்பம் இருந்தால் அதை நகல் எடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகினால், தேர்வெழுதும் பள்ளியின் சரியான முகவரி பெற்றுத் தரப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment