TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அசல் ஆதார் அட்டை தொலைந்த நிலையில் புதிதாக பெற பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அவசியமில்லை: இந்திய தனி அடையாள ஆணையம் தகவல்



அசல் ஆதார் அட்டை தொலைந்த நிலையில், புதிய அசல் அட்டை பெற, பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அவசியமில்லை என்று இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநல திட்டங்களை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக, கடந்த 2010-ம் ஆண்டுமுதல், பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7 கோடியே 45 லட்சம் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் தற்போது அழுக்காகியும், சேதமடைந்தும் உள்ளன.

பலர் அட்டையை தொலைத்தும் விடுகின்றனர். அவர்களின் தேவையை நிறைவு செய்யும் விதமாக ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அந்தஅட்டைகளில் உள்ள கியூஆர் கோடுகளை படிக்க முடியாத காரணத்தால், அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
ஏற்கெனவே வழங்கிய நீளமானஅசல் ஆதார் அட்டை போன்றே, புதிதாக அசல் அட்டையை வழங்கும்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அசல் ஆதார் அட்டை கோருவோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை கொண்டு தான் விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், புதிய அட்டை பெற பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் தேவையில்லை என யுஐடிஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக யுஐடிஏஐ அதிகாரிகள் கூறியதாவது:புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (Pilot Basis) என்ற பகுதியை கிளிக் செய்து, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். புதிய அட்டை பெற ரூ.50 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதற்கு முன்பு ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே, விண்ணப்பிக்கும் முறை நிறைவடையும். இனி, யார் வேண்டுமானாலும் அவர்களது நண்பர், உறவினருக்கு விண்ணப்பிக்கலாம். புதிய அசல் ஆதார் அட்டை, அந்த அட்டையில் இடம்பெற்றுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சலில் வந்து சேரும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment