தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநில வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' (ற்ஹம்ண்ப் ஹ்ங்ர்ம்ஹய்) என்ற வகை வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
தமிழகம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகளாகும்.
காய், கனிகள் மற்றும் விதைகள் உருவாவதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது மகரந்த சேர்க்கையாகும். இந்த மகரந்த சேர்க்கைக்கு உறுதுணையாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகள்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில் 324 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்படுத்தியுள்ளனர். இதில் 311 வகை வண்ணத்துப்பூச்சி வகைகளை, வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் வண்ணத்துப்பூச்சியை தங்களது மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்துள்ளன. அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நண்பனாக விளங்கும் வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசின் பட்டாம் பூச்சியாக அறிவிக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு செய்ய வனத் துறையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. "தமிழ் மறவன்' மற்றும் "தமிழ் லேஸ்விங்' ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், "தமிழ் மறவன்' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாலவர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் "தமிழ் மறவன்' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளார். இதனால் வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வரவேற்புக்குரியது: இதுகுறித்து வண்ணத்துப்பூச்சிகள் கையேட்டின் ஆசிரியர் ஆர்.பானுமதி கூறுகையில், "சிர்ரோசாரா தாய்ஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சி தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீரோடைகள், ஈரமான பகுதிகளில் வாழும். குறிப்பாக மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு, சிறுவாணி பகுதிகளில் இவற்றை அதிகமாக காணலாம்.
பழுப்பு ஆரஞ்ச் நிறத்தில் கருப்பு புள்ளிகள் கொண்ட இவை மரவொட்டி என்ற தாவரத்தில் முட்டையிட்டு, வளரும் தன்மை கொண்டதாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வகையில் அதிக அளவில் இவற்றைக் காணலாம். 60 மி.மீ. முதல் 75 மி.மீ. வரை இதன் உடல் அளவும், ஒரு வாரம் முதல் 3 மாதங்கள் வரை இதன் ஆயுள்காலமும் இருக்கும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்' என்றார்.
கோவையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சி ஆர்வலர் அ.பாவேந்தன் தெரிவித்தாவது:
வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் எங்குள்ளதோ, அந்த வனப்பகுதி செழுமையாக உள்ளது என்று அர்த்தம். அந்த வகையில் கோவையில் கல்லாறு, தேனியில் கல்லாறு மற்றும் மேகமலை, விருதுநகர் அருகே செண்பகத்தோப்பு, திருச்சி அருகே பச்சமலை உள்ளிட்ட 20 இடங்களில் அரியவகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.
தமிழக அரசின் வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' (தமிழ் யாமோன்) அறிவித்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. மேலும், வனத்துறை சார்பில் திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்து அவற்றை பாதுகாத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவு உள்ள வனப் பகுதியை பட்டாம் பூச்சி வனச் சரணாலயப் பகுதியாக அறிவித்து அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment