தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட உள்ளது. முதல் மூன்று நாள்கள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடி கலந்தாய்வு முறையில் சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை, மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தரவரிசையில் முதல் 80 பேரும், மதியம் 1.30 முதல் மாலை 4.30 வரை மீதமுள்ள 58 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இரண்டாம் நாளான புதன்கிழமை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 7 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. முதல் இரண்டு பிரிவுகளில் தலா 100 பேரும், பிற 5 பிரிவுகளிலும் தலா 150 வீதமும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 8 பிரிவுகளாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் இரண்டு பிரிவுகளுக்கு தலா 150 பேரும், பிற 6 பிரிவுகளுக்கும் தலா 150 பேர் வீதமும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 வரை நேரடி கலந்தாய்வு முறையில் சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை 7 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment