TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்: கற்றல்-கற்பித்தலை பெரிதும் பாதிக்கும்



தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆசிரியர்- மாணவர் விகிதம் 1: 60 என அறிவித்திருப்பது கற்றல், கற்பித்தலைப் பாதிக்கும் என்றும் மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
தமிழகத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் கல்வித்துறை சார்பில் அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 60 மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 40 பேருக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறையின் புதிய அறிவிப்புக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது கற்பித்தல் முறையைக் கடுமையாகப் பாதிக்கும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:60 என பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அறிவித்திருப்பது மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும். தற்போது புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதில் ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமம் ஒருபுறம் இருந்தாலும் கற்கும் மாணவர்களுக்கு வகுப்பறை சூழல் ஏதோ கூட்டத்தில் பங்கேற்பது போன்று தோன்றும்.
ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் என்பது இடநெருக்கடி மட்டுமின்றி மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழலில்லாமல் ஒருவிதமான இறுக்கம் ஏற்படுவதோடு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
பாடத்திட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டு அதனை எடுத்துச் செல்லும் வழி சரியாக அமைந்திடாவிட்டால் பயனற்றுப்போகும். முக்கியமாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் பாடங்களை எளிமையாக எடுத்துச் செல்ல மாணவர்கள் -ஆசிரியர் விகிதம் குறைத்தால் மட்டுமே சிறப்பு பெறும் என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் விகிதாச்சாரத்தைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

http://dhunt.in/6l6Ga?s=a&ss=wsp
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment