நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியானது.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அதேநேரத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் பலருக்கு மருத்துவக் கல்விக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதில் குழப்பம் நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு
www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு வரும் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாத மாணவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தடங்கலுக்கு இடமின்றி மாணவர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment