குற்றப்பின்னணி உடையவர்களுக்கு, ஜாமீன் வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் சிலர், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கும், கனிம மற்றும் மணல் கொள்ளையர்களுக்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போருக்கும், ஆதரவாக அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி பிணை தர முன்வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்காக, ஆசிரியர்களில் சிலர் பள்ளி நேரங்களில் நீண்ட நேரம் நீதிமன்றங்களில் காத்திருப்பதாகவும், அது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமை ஆசிரியர்கள் உரிய விடுப்பு விதிகளுக்கு உட்பட்டே விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு அரசுப் பணியாளர் பணி நேரத்தில் மட்டுமன்றி பணி அல்லாத நேரத்திலும் அரசு ஊழியராகவே கருதப்படுவார் என்றும் அரசுப் பணியாளருக்கான மாண்புகளை மீறாமல் செயல்படவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source from polimer news
0 Comments:
Post a Comment