பொதுத்தேர்வுகளைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் போதிய முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 5,317 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் கடந்த மே 31-ஆம் தேதி கணக்கீட்டின்படி 2,144 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், வயது முதிர்வு ஓய்வு மற்றும் பதவி உயர்வின் மூலம் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் ஆகும்.
இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.
பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கவுள்ளது. 2,144 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 27 -இல் தொடங்கி 29-ஆம்தேதி முடிவடையும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளிவந்து ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்குள் பொதுத்தேர்வு வந்துவிடும். எனவே, மாணவர்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Source dinamani
0 Comments:
Post a Comment