read
ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடந்த காலங்களில் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான பொதுக் கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும். இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் புதிய பள்ளியில் பணியேற்பார்கள். இதனால் கற்றல்-கற்பித்தல் பணி, தடையின்றி சிறப்பாக நடைபெற்றது.
தற்போது பல்வேறு காரணங்களால் பொதுக் கலந்தாய்வு தடைப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக அரசின் தவறான முடிவு மற்றும் மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் உள்ளிட்ட வழக்குகள் என பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளது.
இதனால் காலாண்டுத் தேர்வு கூட முடிவடைந்த நிலையில் ஆசிரியர்கள் இல்லாமல், சில பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அனைத்து வழக்குகளும் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவி உயர்வு, பணி நிரவல் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளர்த்தி 2019-20 ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதியும் குடும்பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியர் பணியைத் தொடரக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment