கிறிஸ்துமஸ் சிறப்பு கட்டுரை
கிழக்கை
கிழித்துப்பார்த்தால்....பி.கே.இளமாறன்
வரலாற்றுக்கே முகவரி கொடுத்த முதல்வன்.வாழ்க்கைக்கு வழிகாட்டிய வரலாற்று நாயகன். இவன் தொடங்கிய போராட்டத்தில்தான் புரட்சியே வயதுக்கு வந்தது.அம்மணமாய் நின்றிருந்த அன்பு இவன் பிறப்பால் பட்டாடை அணிந்துக்கொண்டது.
வசியம் பண்ணும் வார்த்தைகளால் வாலிப உள்ளங்களையெல்லாம் சுண்டியிழுத்தது.
கடிவாளம் அணிந்து சில கண்கள் இவன் பிறப்பை களங்கப்படுத்த நினைத்து கருக்குலைந்து போனார்கள். ஒரு தாயின் தாய்மையை தரம்பிரிக்க முயன்று தடுக்கி விழுந்தவர்கள் பலர்.
பெத்லேகத்தில் ஒரு புரட்சி பூ கண்திறந்ததுமே பேயாட்சி நடத்திய அரசு சவபெட்டிக்கு தயாரானது.முதல் நூற்றாண்டில் பதினான்காம் தலைமுறையில் தலைசிறந்த தனிப்பெருந்தலைவர்களில் மூத்தவன்.
விதைக்க. ஒருவன் விதைக்க புறபட்டான் என்று ஆவேசத்தோடு புறப்பட்ட பூபாளக்குயில்.
மக்களுக்கு நாகரீகத்தின் அரிச்சுவடிகளைக் கற்றுக்கொடுத்த முதல் ஆசிரியன்.
முதல் சோசலிசவாதியான இவன் காலத்தில்தான் சமூக அங்கீகாரம் கர்ப்பம் தரித்தன.
இவன் கடலோரப் பிரசங்கம் காற்றின் ஜீவ ஒலியில் கலந்து மக்கள் மனசில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தின.
அனாதை ரட்கனே சகோதரத்துவம் அந்நியமாகிப்போன அந்த காலத்திலேயே உன் இதயம் அரிதாரம் பூசாத அன்பை வழங்கியது.
உன் உயிரின் ஜன்னல் கதவுகளையெல்லாம் திறந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக உதிரம் துடித்தது.
இளைத்துப்போன வயிற்றுக்கும் ஒடுங்கிப்போன உடலுக்கும் ஊட்டச்சத்து உன் பேச்சு.
பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஏற்படுத்தியப் பண்பாளன்.
மலையின் மீது ஏறி நின்று மக்களுக்கு மனம் திறந்து பேசிய உரைவீச்சில் சமூகப்பார்வை. மனைவியை தள்ளிவைப்பவனும் தள்ளுசீட்டு அளிப்பவனும் மனித பிறவியே இல்லையென்றார்.
பெண்களை விபச்சாரத்திலும் ஈனச்செயல்களிலும் ஈடுபடுத்துதல் இரக்கமற்றச் செயலாகும்.பெண்ணை கவர்ச்சிப் பொருளாகவும் போதைப்பொருளாகவும் மனசுக்குள் கனவு காண்பதும் விபச்சாரத்திற்கு விலைபேசுவதும் விவேகமற்றச் செயலாகும்.
பெண்ணுரிமைக்காக முதல் குரல்கொடுத்த ஆண்மைமிக்க ஆண்மகன்.
உன் எழுச்சிமிக்க வசனங்கள் உணர்வுக்கே உயிரூட்டின.உணர்ச்சி கொந்தளிப்பு கண்ணில் கசிந்த ஆவேச நெருப்பால் சமுத்திரம் கருகியது.
காலகாலமாகக் கட்டிவைக்கப்பட்ட சாத்திரச்சடங்குகள் உடைத்தெறிந்து உண்மைகளை உலகுக்கு உரைத்த உத்தமர்.புரியாத வட்டத்தில் புழுங்கி அடிமைகளாக அடக்கி வைக்கப்பட்ட மக்களை ஆளப்பிறந்தவர்கள் என்று அடையாளம் காட்டிய ஆண்மகன்.
சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருந்த அந்த கருப்பு வலையினை கிழித்தெறிய நீயே கிழிந்துபோனாய்.
சூரியனை சில நேரங்களில் புகை மண்டலங்கள் சூழ்ந்து மறைத்தாலும் உன் வெளிச்சக் கீற்றுகள் வெளியே வராமல் இல்லை.
உடைந்த நம்பிக்கை வாழ்வைத்திருடிய பிலோத் போன்ற கொடுங்கோலன் ஆணவ ஆட்சியின் அடக்குமுறை அலைகளில் அடித்துச் சென்ற அப்பாவிகள். அத்தனைக்கும் மேலாக சிந்திக்கவிடாமல் சிக்கல்கள் சிகரம் தொடுமளவில் ஏற்படுத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கு முற்றுப்புள்ளிக்கு முன்னுரை எழுதி தனியொரு மனிதனாகப் போராடியப் போராளி.
சிந்தனை புரட்சி எண்ணம் தெளிவு ஜனநாயகக் கருத்துகளைப் பரப்பும் உன் கொள்கைகள் கண்டு நடுங்கிய கொல்கதா மன்னன் பிலோத் கருத்துக்களை கைது செய்வதாக எண்ணி உன் கைகளுக்கு ஆணி அடித்தார்கள்.
சின்னச் சிலுவைக்குள்ளா
சிகரத்தைப் பூட்டமுடிந்தது?
உன் புரட்சி முழக்கம் தானே மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன மூடர்கள் மூளைகளை சலவைச்செய்தது.
மனிதநேயத்தின் மறுபக்கம் உயிரினங்களையெல்லாம் உறவாக நினைத்த உத்தமனே. சாதி மதமற்ற சமுதாயத்தைப் படைக்க நினைத்த பாட்டாளி.
இருட்டுக்குள் இளகிப்போயிருந்த. இதயங்களுக்கு வெளிச்சம் காட்டி வீரத்தையும் விவேகத்தையும் வளர்த்தவன்.
உன்னை காட்டிகொடுத்த யூதாசூடன் வந்தவர்கள் இயேசு யாரென்று கேட்டபோது ஓடி ஒளிந்துகொள்ளாமல் நேருக்கு நேர் வீரச்செருக்குடன் நின்ற மாவீரன்.
என்னால் நம்பமுடியவில்லை.
30. வெள்ளி நாணயங்களுக்காக இருபதாண்டு காலம் நம்பிக்கை நசுங்கிப்போனது எப்படி?
32 வயதிற்குள் ஒரு பிரளயத்தையே புதுப்பித்த புரட்சியாளர்
ஆம். சாவுக்குப்பிறகும் சரித்திரம் படைத்த சாதனையாளர்.
கிழக்கைக் கிழித்துப்பார்த்தால் கிருஸ்துவின் முகம் தெரியும்.
*பி.கே.இளமாறன்*
Nice
ReplyDelete