மாணவர்களின் நலன்கருதி அரசுப்பள்ளிகளில் காலைச்சிற்றுண்டி வழங்கிட வேண்டும்
தமிழ்நாடு ஆ சிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
நீதிக்கட்சி அரசால் 1920, பிப்ரவரி 2 ல் சென்னையில் 5 இடங்களில் சர்.பிட்டி.தியாகராயர் அவர்கள் நகராட்சி பள்ளிகள் தொடங்கினார். அவற்றுள் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்த நகராட்சிப்பள்ளியில் மாணவர்களுக்கு முதன்முதலாக மதிய உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது. மார்ச் 27,1955 ல் மெட்ராஸ் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்ட. அப்போதைய முதல்வர் கர்மவீரர் காமராசர் அவர்கள் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்ட மதியஉணவுத் திட்டம் பற்றி அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களிடம் செலவினம் குறிது கேட்டறிந்து அறிவித்தார்.பிறகு 1956 மதிய உணவுத்திட்டம் நடைமுறையில் வந்தபிறகு 4 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில், சத்துஉணவுத் திட்டமாக மாற்றி பள்ளிகளிலே சமைத்து வழங்கினார். பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முட்டையுடன் கூடிய சத்துணவாகத் தொடர்ந்தார். ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தினம் ஒரு உணவாகப் பல்சுவை சத்துணவு வழங்கப்பட்டு தொடர்ந்து வருகிறது.
அரசு மற்றும் சென்னைப்பள்ளிகளில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட, நலிந்த தினக்கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகளே படிப்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பல மாணவர்கள் காலையில் சாப்பிடாமலே வருவதைக்கண்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் 2009 முதல் தமிழ்நாடு அரசினை காலைச்சிற்றுண்டித் திட்டம் தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி தரமணியில் அட்சயா பவுண்டேசன் மூலமாக மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கி மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைத்து 25 பள்ளிகளில், நடைபெற்றுவருகிறது. பிறகு ஆளுநர் அவர்கள் நிதியிலிருந்து 2 கோடி வழங்கினார்.மேலும் 25 பள்ளிகளுக்கு காலை உணவு வழங்க முதல்வர் 5 கோடி வழங்கியதுடன்,
அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு அரசு தாரை வார்த்துக் கொடுத்து பூமி பூஜையிலும் கலந்துகொண்டார்.இந்த இடங்களின் மதிப்பு, இன்றைய நிலையில் 500 கோடிக்கும் மேல் ஆகின்றது.
தமிழ்நாட்டில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது.ஆனால் இந்த அமைப்பு பூண்டு,வெங்காயம் கலக்காத சைவ உணவை வழங்குகிறது.
தனியார் அமைப்பின் சமூகசேவை வரவேற்புக்குரியது . ஆனால்
தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு எதிராகவே செயல்படுவது ஏற்புடையதல்ல.மேலும், பலகோடி ரூபாயினை தனியார் அமைப்பிற்கு தாரைவார்ப்பதை விட அனைத்து மாணவர்களுக்கும் தரமான காலை உணவுத்திட்டத்தினை தமிழக அரசே ஏற்று நடத்தி கர்மவீரர் காமராசரின் கனவான மாணவர் சேர்க்கையினை அதிகரிப்பதோடு அரசுப்பள்ளிகளை மேம்படுத்தினால் வரலாற்றில் நிச்சயம் முதல்வர் அவர்களும் இடம்பிடிப்பதில் சந்தேகமில்லை. எனவே காலை உணவுத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு நடத்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
0 Comments:
Post a Comment