அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் உதவிபேராசிரியர் பணி தேர்வுக்கு பள்ளிக்கல்வி கற்பித்தல் அனுபவத்திற்கும் மதிப்பெண் வழங்க மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 4.10.2019 அன்று அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2018-19 ஆண்டிற்கான காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, உரியக் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்ய அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் இப்பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை 21.01.2021 அன்று முதற்கட்டமாக அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க இருக்கிறது. இப்பணிகளுக்கான தேர்வுமுறையில் கற்பித்தல் அனுபவம் (15 மதிப்பெண்கள்), உயர்கல்வி தகுதி (9 மதிப்பெண்கள்) மற்றும் நேர்முகத்தேர்வு (10 மதிப்பெண்கள்) ஆகிய மூன்றின் கட்-ஆப் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கற்பித்தல் அனுபவத்திற்கான மதிப்பெண் கணக்கீட்டு முறையில் கல்லூரி அனுபவம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே பள்ளிகளில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு இத்தேர்வு முறையால் ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையை மாற்றி பள்ளிக்கல்வி கற்பித்தல் அனுபவத்திற்கும் குறைந்தபட்ச மதிப்பெண்களாவது வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு.முதல்வர் அவர்களை பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
No comments:
Post a Comment