Pages

Pages

Friday, August 16, 2019

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, 2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாட்டிலுள்ள ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர்.
இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அவ்வாறு நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிக் கல்வி துறையின் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவ்வாறு நடக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தனது கவனத்திற்கு வரவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்திருந்தார். 

சுதந்திர தினமான நேற்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரண-சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தேசிய கொடி ஏற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளே தொடரும் என்று தெரிவித்தார். மேலும், சாதி, மத அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதா என அந்தந்த பள்ளிகளே சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment