மத்திய, மாநில அரசுகள் சார்பில் முதியோர், விதவை, மாற்றுத்தினாளிகளுக்கான ஓய்வூதியம் போன்ற சமூகநலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குடும்பஅட்டை மூலமாக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சமையல் எரிவாயு பெற மானியம் வழங்கப்படுகிறது.
தகுதிவாய்ந்த ஏழை மக்களை மட்டுமே இத்திட்டங்களின் பயன்சென்றடைய வேண்டும்; தகுதியற்றவர்கள் இதுபோன்ற திட்டங்களின் பயனை அனுபவிப்பதால் அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆதார் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.
தற்போது சிம் கார்டு வாங்குவது, வங்கி, அஞ்சல் கணக்கு தொடங்குவது, சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது போன்றவற்றுக்கு 'உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்' (KYC) படிவம் வழங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதை தாள் வடிவில் விண்ணப்ப படிவமாக பெற்று, அதை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி சமர்ப்பிக்க வேண்டிஉள்ளது. அதை பரிசோதிக்கவும் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், ஆதார் மூலமாக பயோமெட்ரிக் விவரங்கள் (கைரேகை, கண் கருவிழி படலம்) அடிப்படையில் கேஒய்சி படிவம் தாக்கல் செய்ய, கை விரல் ரேகையை வைத்தாலே போதும்.
அதிகாரிகள் தகவல்
இந்நிலையில், இந்த பயோமெட்ரிக் விவரங்களை, நவீன தொழில்நுட்பம் மூலம் வேறு யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட நபரே அந்த விவரங்களை தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை பூட்ட ('லாக்' செய்ய) வேண்டும் என்றால், https://uidai.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று, My Aadhaar என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அங்கு Aadhaar Services என்பதன் கீழ் Lock/Unlock Biometric என்று இருக்கும். அதை கிளிக் செய்து, அதில் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். அப்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுக்கு 'ஓடிபி' எண் வரும். அதை பதிவிட்டால் சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் விவரங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டுவிடும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட நபரே பயோமெட்ரிக் ரீடரில் கை வைத்தாலும், அதை கணினி ஏற்காது.
மீண்டும், மேற்கண்டவாறு செய்து Enable/Disable Biometric Lock என்பதன் கீழ் ஓடிபி எண்ணை பதிவிட்டால் மட்டுமே பயோமெட்ரிக் விவரங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம், ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment