வேக வைத்த முட்டையை நசுக்காமல் சிறிய வாய் கொண்ட கண்ணாடி பாட்டிலுக்குள் உங்களால் நுழைக்க முடியுமா? முடியும், வாருங்கள் செய்து பார்க்கலாம். (பெரியவர்களின் மேற்பார்வையில்தான் இதைச் செய்ய வேண்டும்.)
என்னென்ன தேவை?
வேக வைத்த முட்டை கண்ணாடி பாட்டில் தீப்பெட்டி காகிதத் துண்டு
எப்படிச் செய்வது?
# கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். (முட்டையைவிட பாட்டிலின் வாய் சற்றுச் சிறியதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.)
# இப்போது சிறிய காகிதத் துண்டை பற்றவைத்து கண்ணாடி பாட்டிலுக்குள் போடுங்கள்.# சில நொடிகளுக்குப் பிறகு, பாட்டிலின் வாய்ப் பகுதியில் முட்டையை வையுங்கள்.
# இப்போது கவனியுங்கள். பாட்டிலுக்குள் போட்ட எரியும் காகிதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அணைந்துவிடும்.
# காகிதம் அணைந்த உடனே முட்டை ஒருவித சத்தத்துடன் தானாக பாட்டிலுக்குள் சென்று உள்ளே விழுந்துவிடும் .
பாட்டிலின் வாயில் வைத்த முட்டை தானாக எப்படி உள்ளே விழுந்தது?
காரணம்
காலி கண்ணாடி பாட்டிலில் ஆக்சிஜன் இருக்கும். காகிதத் துண்டு எரிவதற்கு காற்றில் உள்ள ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக பாட்டிலுக்குள் காற்றழுத்தம் குறையும். அதேவேளையில் பாட்டிலுக்குள் இருக்கும் காற்றழுத்தத்தை விட வெளியே இருக்கும் காற்றழுத்தம் அதிகம்.
இந்த இரு வேறான காற்றின் அழுத்த வேறுபாட்டால் வெளிக்காற்று விசையுடன் முட்டையைக் குடுவைக்குள் தள்ளிவிடுகிறது. கண்ணாடி பாட்டிலுக்குள் முட்டை செல்ல இதுவே காரணம். இதிலிருந்து காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதை அறியலாம்.
பயன்பாடு
வீடுகளில் பயன்படுத்தப்படும் கைப்பம்பு இந்தத் தத்துவத்தில்தான் இயங்குகிறது. பிஸ்டனுக்குக் கீழே உள்ள தண்ணீர் மேலே வருவதற்கு காற்றழுத்தமே உதவுகிறது.
No comments:
Post a Comment